Tue10172017

Last updateWed, 18 Oct 2017 12am

Back You are here: Home செய்திகள் செய்திகள் இந்தியச் செய்திகள் டார்ஜீலிங்கில் வன்முறை: போலீஸ் சுட்டு 3 பேர் பலி

இந்தியச் செய்திகள்

டார்ஜீலிங்கில் வன்முறை: போலீஸ் சுட்டு 3 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் மலைப்பகுதியில் போலீஸார் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 35 காவலர்கள் காயமடைந்தனர்.darli.jpg - 7.31 kB

மேற்கு வங்கத்திலுள்ள டார்ஜீலிங் மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கிய 'கோர்க்காலாந்து' என்னும் தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி கோர்க்கா இனத்தவர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். 'கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா' என்ற கட்சியை பிமல் குருங் கடந்த 2007-இல் தோற்றுவித்தார். கோர்க்காலாந்தை உருவாக்கக் கோரி, இக்கட்சியினர் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், பிமல் குருங் மற்றும் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் முன்னணித் தலைவர்களின் வீடுகளில் போலீஸார் அண்மையில் சோதனை நடத்தினர். அப்போது ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் சார்பில் டார்ஜீலிங்கில் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினருக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

பெட்ரோல் குண்டு வீச்சு: டார்ஜீலிங் மற்றும் அந்த மாவட்டத்துக்கு உள்பட்ட கூம் நகரில் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியின்போது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. சிலர் போலீஸாரை நோக்கி பாட்டில்களையும், கற்களையும் வீசினர்.

இதனால், அப்பகுதியே போர்க்களமாக மாறியது. நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். அப்போது, கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, போலீஸாரும் திருப்பிச் சுட்டனர். இதில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த அதிகாரி கிரண் தமாங் படுகாயமடைந்தார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக, கிரண் தமாங் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இதனிடையே, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த இரு தொண்டர்கள் உயிரிழந்துவிட்டதாக அந்த அமைப்பின் மூத்த தலைவர் பினய் தமாங் தெரிவித்தார்.

எனினும், இந்தத் தகவலை காவல்துறை துணைத் தலைவர் அனுஜ் சர்மா மறுத்தார். இது குறித்து அவர் கூறுகையில், 'போலீஸார், யார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒருவர் உயிரிழந்தார். 35 காவலர்கள் காயமடைந்தனர்' என்றார் அவர்

டார்ஜீலிங் வன்முறை தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:

டார்ஜீலிங்கில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் முழுக்க முழுக்க திட்டமிட்ட சதியாகும். இந்த வன்முறையின் பின்னணியில் சில பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. பயங்கரவாதிகளால் மட்டுமே இத்தகைய வன்முறைகளை நிகழ்த்த முடியும். கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவுக்கும் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் சில தீவிரவாதக் குழுக்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்த வன்முறையின் பின்னணியில் சில வெளிநாடுகளும் உள்ளன.

ஒரே நாளில் இத்தனை ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் அவர்களால் குவித்துவிட முடியாது. நீண்ட காலமாக, அவை சேகரிக்கப்பட்டு வந்துள்ளன. மலைப் பகுதி என்பதாலும், சில மாநிலங்கள் மற்றும் நாடுகளின் எல்லையையொட்டி இருப்பதாலும் டார்ஜீலிங் வழியாக ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன.

நான் எனது உயிரை விட்டாலும் விடுவேனே தவிர, மேற்கு வங்கத்தைப் பிரிக்க ஒருக்காலும் ஒப்புக் கொள்ளமாட்டேன். டார்ஜீலிங் மலைப்பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறேன். இந்தப் பிரச்னையில் மத்திய அரசு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இனி மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கௌதம் தேவும், பொதுப் பணித் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸும் டார்ஜீலிங் மலைப்பகுதியை கவனித்துக் கொள்வார்கள் என்றார் மம்தா பானர்ஜி

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு

டார்ஜீலிங் மலைப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து விவாதிப்பதற்காக மேற்க வங்க அரசு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. சிலிகுரியில் வரும் வியாழக்கிழமை (ஜூன் 22) இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் விசாரிப்பு

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு டார்ஜீலிங் வன்முறை குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக, டார்ஜீலிங் நகரில், கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடந்த 8-ஆம் தேதி மோதல் வெடித்தது. இதில், காவல்துறை வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்று ராணுவம் அங்கு குவிக்கப்பட்டது