Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home செய்திகள் செய்திகள் இந்தியச் செய்திகள் மேலும் 2 கருணை மனுக்களை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

இந்தியச் செய்திகள்

மேலும் 2 கருணை மனுக்களை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

இரு வேறு வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் அனுப்பிய 2 கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப்pranab.jpg - 4.9 kB

முகர்ஜி கடந்த மாதம் நிராகரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன் அவர் தமது பதவிக்காலத்தில் நிராகரித்த கருணை மனுக்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் அனுப்பி வைத்த 2 கருணை மனுக்களை அவர் கடந்த மாதம் நிராகரித்தார். அவற்றில் முதலாவது வழக்கு, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த 2012-இல் நான்கு வயது சிறுமியை 3 நபர்கள் பலாத்காரம் செய்து, கொலை செய்தது தொடர்பானதாகும். மற்றொரு வழக்கு, மகாராஷ்டிர மாநிலம் புணேவில் பெண் ஊழியர் ஒருவரை காரில் அழைத்துச் சென்ற ஓட்டுநரும், அவரது கூட்டாளியும் பலாத்காரம் செய்து, கொன்றது தொடர்பானதாகும்.

அரசியல்சாசனத்தின் 72-ஆவது பிரிவின்படி எந்தவொரு நபருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கவோ, ரத்து செய்து கருணை காட்டவோ, தண்டனையைக் குறைக்கவோ முடியும். எனினும், மத்திய அமைச்சரவையின் ஆலோசனைப்படி அவர் செயல்பட வேண்டியிருக்கும். தற்போதைய விதிகளின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தானது மத்திய அமைச்சரவையின் கருத்தாகக் கருதப்படுகிறது. பின்னர், அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கருணை மனுக்கள் விவகாரத்தை இதுவரை பல்வேறு குடியரசுத் தலைவர்கள் வெவ்வேறு விதமாகக் கையாண்டுள்ளனர். அப்துல் கலாம் தமக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களில் இரண்டின் மீது மட்டுமே முடிவு செய்தார். கே.ஆர்.நாராயணன் 1997 முதல் 2002-ஆம் ஆண்டு வரையிலான தனது பதவிக்காலத்தில் ஒரு கருணை மீது கூட எந்த முடிவும் எடுக்கவில்லை. பிரதிபா பாட்டீல் 30 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, கடந்த 1991 முதல் 2010 வரை குடியரசுத் தலைவர்கள் 77 கருணை மனுக்கள் மீது முடிவெடுத்தனர். அவற்றில் 69 மனுக்களை அவர்கள் நிராகரித்தனர்.

தற்போது வரை அதிக அளவிலான கருணை மனுக்களை நிராகரித்த குடியரசுத் தலைவர் என்ற பெயரை ஆர்.வெங்கட்ராமன் பெற்றுள்ளார். அவர் 1987 முதல் 1992 வரையிலான தமது பதவிக்காலத்தில் 44 மனுக்களை நிராகரித்தார்.