Fri06232017

Last updateFri, 23 Jun 2017 4am

Back You are here: Home செய்திகள் செய்திகள் இந்தியச் செய்திகள் ஸ்டாலின் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு

இந்தியச் செய்திகள்

ஸ்டாலின் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு

பண பேர விவகாரத்தில் ஸ்டாலின் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கும், தலைமைச் செயலாளருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.stalin.jpg - 8.83 kB

முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு, கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரியது. அப்போது தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு பல கோடி பேரம் பேசியதாக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியிருந்த வீடியோவை ஆங்கில தொலைக்காட்சி ஒன்று கடந்த வாரம் வெளியிட்டது. 'அந்த வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால், அந்தக் குரல் என்னுடையது அல்ல' என்று எம்எல்ஏ சரவணன் மறுப்பு தெரிவித்தார். இந்த வீடியோ விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், பேரவைத் தலைவர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து சனிக்கிழமை மாலை சென்னை வந்தார். அவரை ராஜ்பவனில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் சென்றிருந்தனர். ஆளுநரிடம் கோரிக்கை மனுவை அளித்த ஸ்டாலின், அதற்கு ஆதாரமாக ஒரு சி.டி.யையும் கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.சரவணன், கனகராஜ் ஆகியோரின் நம்பிக்கை வாக்கெடுப்பு பேரம் குறித்த 'ஸ்டிங் ஆபரேஷன்' வீடியோ பதிவுகள் வெளியாகியுள்ளன. லஞ்சம் மற்றும் தவறான தூண்டுதல் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஆளுநர் தலையிட வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந் துள்ள குளறுபடிகள், 'டைம்ஸ் நவ்' வீடியோ உள்ளிட்ட விவகாரங்களின் அடிப்படையில் மீண்டும் புதிதாக ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வர் கே.பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும். குதிரை பேரம் குறித்து சிபிஐ பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி, 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களின் பண பேர விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து பண பேர விவகாரத்தில் ஸ்டாலின் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கும், தலைமைச் செயலாளருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.