Tue08222017

Last updateTue, 22 Aug 2017 8am

Back You are here: Home செய்திகள் செய்திகள் உலக செய்திகள் கியூபாவுடனான ஒபாமா அரசின் நல்லுறவு ஒப்பந்தம் ரத்து!

உலக செய்திகள்

கியூபாவுடனான ஒபாமா அரசின் நல்லுறவு ஒப்பந்தம் ரத்து!

அமெரிக்காவில், முந்தைய ஒபாமா அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, கியூபாவுடன் ஒபாமா மேற்கொண்டிருந்த நல்லுறவு ஒப்பந்தத்தை தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார்.trump.jpg - 5.31 kB

அமெரிக்காவுக்கும், கம்யூனிஸ்டா நாடான கியூபாவுக்கும் பனிப் போர் காலத்திலிருந்தே பகை நீடித்து வந்தது. கியூபா புரட்சிக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டு வந்த இடைவெளியைத் தொடர்ந்து, கடந்த 1961-ஆம் ஆண்டு இரு நாடுகளும் தங்களது தூதரக உறவை முறித்துக் கொண்டன.

அதனைத் தொடர்ந்து, கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசைக் கவிழ்க்க தனது சிஐஏ உளவுத் துறை மூலம் பல ஆண்டுகளாக அமெரிக்கா முயற்சி செய்து வந்தது. மேலும், கியூபாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் விதித்தது. இந்த நிலையில், சுமார் 60 ஆண்டுகளாக நீடித்து வந்த பகையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கியூபாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

அதன் பலனாக, பல ஆண்டுகள் கழித்து நல்லுறவை ஏற்படுத்த இரு நாடுகளும் கடந்த 2014-ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டன. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்கத் தூதரகம் கியூபாவிலும், கியூபாவின் தூதரகம் அமெரிக்காவிலும் அமைக்கப்பட்டன.

மேலும், கியூபாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுப் பயணத்தை ஒபாமா மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே நல்லுறவு மலரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.இந்த நிலையில், ஒபாமாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், கியூபாவுடனான ஒபாமா அரசின் நல்லுறவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகக் கூறினார்.

அந்த ஒப்பந்தம் கியூபாவுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாலும், அமெரிக்க நிதி கியூபாவின் ஏகபோக ஆட்சியாளர் ரெளல் காஸ்ட்ரோவின் கைகளில் சேர்வதைத் தடுப்பதற்காகவும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, கியூபாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளவர்கள் பெருமளவில் வசிக்கும் மியாமி நகரில் லிட்டில் ஹவானா பகுதியில் டிரம்ப் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கியூபாவுடன் முந்தைய அரசு மேற்கொண்ட ஒருதலைப்பட்ச ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளேன். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது நான் அளித்த வாக்குறுதியின்படி, கியூபா குறித்த புதிய கொள்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அந்தக் கொள்கை, கியூபா மக்களின் நலனையும், அமெரிக்க நலனையும் மையப்படுத்தியதாக இருக்கும். அமெரிக்காவின் சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவதன் மூலம் இந்தப் புதிய கொள்கை செயல்படுத்தப்படும்.

கியூபாவில் அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பபட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்படும் வரையில், பேச்சுரிமையும், கூட்டம் நடத்தும் உரிமையும் அளிக்கப்படும் வரையில், அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் நியாயமான தேர்தல் நடத்தப்படும் வரையில், அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும்.

எனினும், அந்த நாட்டு மக்கள் தொழில் செய்து, தங்கள் வளர்ச்சியையும், நாட்டின் வளர்ச்சியையும் பெருக்குவதற்காக அவர்களுக்கு நேரடியாக அமெரிக்க நிதியுதவி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால், கம்யூனிஸ்ட் அரசுக்கு அமெரிக்க நிதி சென்று சேர்வது தடுக்கப்படும். மேலும், கியூபா நாட்டவர் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதும் தடுக்கப்படும். எனவே, யாரும் தங்கள் உயிரை பணயம் வைத்து அமெரிக்காவுக்கு வருவதற்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டாம்.

கியூபாவில் தற்போது ஆட்சி செய்து வரும் அரசு, தனது சொந்த நாட்டு மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததையும், அமெரிக்காவின் எதிரி நாட்டு (ரஷியா) அணு ஆயுதத்தை நமது எல்லைக்கு அருகே நிறுத்தச் செய்ததையும் நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என்றார் டொனால்ட் டிரம்ப். அதிபராகப் பதவியேற்ற பிறகு, முந்தைய அரசின் முடிவுகளுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் வெளியிடும் மூன்றாவது அறிவிப்பு இது.

ஏற்கெனவே, ஒபாமா அரசின் கனவுத் திட்டமான 'ஒபாமாகேர்' எனப்படும் மருத்துவ வசதித் திட்டத்தை டிரம்ப் ரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து, உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்காக ஒபாமா அரசு கையெழுத்திட்ட பாரீஸ் சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில், கியூபா குறித்த ஒபாமா அரசின் கொள்கை முடிவுகளையும் டொனால்ட் டிரம்ப் தற்போது ரத்து செய்துள்ளார்.