Mon02192018

Last updateTue, 20 Feb 2018 4am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது கிரிக்கெட் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

கிரிக்கெட்

வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் ரோகித் சர்மாவின் சதத்தின் உதவியுடன் வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுதினம் நடக்கும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி,

பாகிஸ்தானுடன் மோத உள்ளது.

 

இங்கிலாந்தில் நடந்து வரும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது. முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

இந்த நிலையில் பர்மிங்காமில் நேற்று அரங்கேறிய 2-வது அரைஇறுதியில் ஆசிய அணிகளான நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின. இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மழை காரணமாக ஆட்டம் 10 நிமிடம் தாமதமாக தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

இதையடுத்து வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பாலும், சவுமியா சர்காரும் களம் புகுந்தனர். புவனேஷ்வர்குமார் வீசிய முதல் ஓவரிலேயே சர்கார் (0) கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த சபிர்ரகுமானின் (19 ரன்) விக்கெட்டையும் புவனேஷ்வர்குமார் காலி செய்து நெருக்கடிக்குள்ளாக்கினார். அதைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு இறங்கிய விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம், புவனேஷ்வர்குமாரின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். முதல் 10 ஓவர்களில் வங்காளதேசம் 46 ரன்கள் எடுத்தது. இந்த சாம்பியன்ஸ் கோப்பையில் வங்காளதேசம் முதல் 10 ஓவர்களில் எடுத்த அதிகபட்ச ரன் இது தான். 

ஆரம்பத்தில் தடுமாறிய தொடக்க வீரர் தமிம் இக்பால் 39 பந்தில் 16 ரன்னுடன் இருந்த போது வெளியேறி இருக்க வேண்டியது. ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் போல்டு ஆனார். அவரது அதிர்ஷ்டம் அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டதால் தப்பி பிழைத்தார். 

சிறிது நேரம் நிதானமாக ஆடிய தமிம் இக்பால் பின்னர் முஷ்பிகுர் ரஹிமுடன் சேர்ந்து அதிரடி காட்ட தொடங்கினார். சலனமற்ற இந்த ஆடுகளம் (பிட்ச்) பேட்டிங்குக்கு சாதகமாகவே காணப்பட்டதால் இருவரும் துரித ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினர். ஒரு சில ஓவர்களில் எல்லா பந்துகளிலும் இடைவிடாது ரன்கள் எடுத்த வண்ணம் வந்தனர். இதை கண்ட இந்திய கேப்டன் கோலி கடுப்பாகிப்போனார். 18.5 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. அஸ்வினின் ஓவரை நொறுக்கிய தமிம் இக்பால் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓட விட்டு மிரட்டினார். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி 300 ரன்களை எளிதில் தாண்டிவிடும் என்றே தோன்றியது. 26.2 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது.

 

இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்த இந்த ஜோடியை ஒருவழியாக பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் பிரித்தார். ஸ்கோர் 159 ரன்களாக உயர்ந்த போது, தமிம் இக்பால் (70 ரன், 82 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவரது பந்து வீச்சை முட்டி போட்டு அடிக்க முற்பட்ட போது கிளன் போல்டு ஆனார். அவரது விக்கெட் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வகையில் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து வந்த ஷகிப் அல்-ஹசனை (15 ரன்) சீக்கிரமாகவே ஜடேஜா வெளியே துரத்தினார். மறுமுனையில் அரைசதத்தை கடந்த முஷ்பிகுர் ரஹிம் (61 ரன், 85 பந்து, 4 பவுண்டரி) ஜாதவின் சுழலில் இறங்கி வந்து ஆடிய போது கோலியிடம் சிக்கினார். 25 ரன் இடைவெளியில் 3 முன்னணி தலைகள் உருண்டதால், வங்காளதேசத்தின் ரன்வேகத்துக்கு பலமான முட்டுக்கட்டை விழுந்தது. அதன் பிறகு தான் இந்திய வீரர்களுக்கு நிம்மதியே வந்தது. 

ஆனால் இந்த ‘பிடி’யையும் இந்திய பவுலர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களை 250 ரன்களுக்குள் முடக்கி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதி கட்டத்தில் கேப்டன் மோர்தசா (30 ரன், 25 பந்து, 5 பவுண்டரி) அளித்த கணிசமான பங்களிப்பால் அந்த அணி ஓரளவு சவாலான ஸ்கோரை அடைந்தது. 

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் சேர்த்தது.  

பின்னர் 265 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து தந்தனர். தவான் 46 ரன்களில் (34 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். 

இதன் பின்னர் ரோகித் சர்மாவும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து அணியை வெற்றி நோக்கி வேகமாக பயணிக்க வைத்தனர். முஸ்தாபிஜூர் ரகுமான் உள்பட 8 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தும் இவர்களை அசைத்து கூட பார்க்க முடியவில்லை. வங்காளதேச பந்துவீச்சை பின்னியெடுத்தனர். 

அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, ஷாட்பிட்ச் பந்தில் சிக்சர் அடித்து தனது 11-வதுசதத்தை நிறைவு செய்தார். கோலியின் நேர்த்தியான ஆட்டமும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இறுதியில் பவுண்டரி அடித்து கோலி வெற்றிக்கனியை பறித்தார். 

இந்திய அணி 40.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 265 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரோகித் சர்மா 123 ரன்களுடனும் (129 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), விராட் கோலி 96 ரன்களுடனும் (78 பந்து, 13 பவுண்டரி) களத்தில் இருந்தனர். இவர்கள் இணைந்து எடுத்த 178 ரன்கள் சாம்பியன்ஸ் கோப்பையில் 2-வது விக்கெட்டுக்கு இந்திய ஜோடி சேர்த்த அதிகபட்சமாகும். ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை பெற்றார். 

லண்டன் ஓவலில் நாளை மறுதினம் நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.