Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது கிரிக்கெட் அடிலெய்டில் ஆஸி., அசத்தல் வெற்றி

கிரிக்கெட்

அடிலெய்டில் ஆஸி., அசத்தல் வெற்றி

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டில் ஸ்டார்க், ஹேசல்வுட் ‘வேகத்தில்’ அசத்த ஆஸ்திரேலிய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி மீண்டும் ‘சரண்டர்’ ஆனது.starc.jpg - 8.66 kB

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி முதல் முறையாக பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 442(‘டிக்ளேர்’), இங்கிலாந்து 227 ரன்கள் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 138 ரன்கள் எடுத்தது. பின் 354 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. க

ஹேசல்வுட் கலக்கல்: கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு 178 ரன் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து களமிறங்கியது. துவக்கத்திலேயே ‘வேட்டு’ வைத்தார் ஹேசல்வுட். இவர் வீசிய ஆட்டத்தின் 2வது பந்தில் வோக்ஸ் (5) சிக்கினார். மீண்டும் வந்த ஹேசல்வுட் இம்முறை ரூட்டை (67) வெளியேற்றி, இங்கிலாந்தின் நம்பிக்கையை தகர்ததார். மொயீன் அலியும் (2) அணியை கைவிட்டார்.

ஸ்டார்க் மிரட்டல்: வழக்கம்போல பின் வரிசையை ஸ்டார்க் தகர்த்தார். இவரின் ‘வேகத்தில்’ ஓவர்டன் (7), பிராட் (8) நடையைக்கட்டினர். சற்று ஆறுதல் தந்த பேர்ஸ்டோவ் (36) போல்டானார். மொத்தம் 22.2 ஓவரை மட்டுமே எதிர் கொண்டு 6 விக்கெட்டை பறிகொடுத்தது. முடிவில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி வீழ்ந்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் பெற்றார்.

ஆஸ்திரேலிய அணி 2–0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 14ம் தேதி பெர்த்தில் துவங்குகிறது.

‘ஹாட்ரிக்’ வெற்றி

அடிலெய்டு மைதானத்தில் ஏற்கனவே நியூசிலாந்து (2015), தென் ஆப்ரிக்கா (2016) அணிகளுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வென்றிருந்தது. நேற்றும் அசத்தியதன் மூலம், இம்மைதானத்தில் பகலிரவு டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.

தொடரும் தோல்வி

வரும் 14ம் தேதி பெர்த்தில் மூன்றாவது டெஸ்ட் துவங்கவுள்ளது. இங்கு 1978ல் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இதன்பின், இம்மைதானத்தில் நடந்த 11 டெஸ்ட் போட்டியில் 9ல் இங்கிலாந்து தோல்வியே அடைந்துள்ளது. இரண்டு போட்டி ‘டிரா’வில் முடிந்தது.