Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது கிரிக்கெட் கோப்பை வென்று இந்தியா சாதனை: டில்லி டெஸ்ட் ‘டிரா’

கிரிக்கெட்

கோப்பை வென்று இந்தியா சாதனை: டில்லி டெஸ்ட் ‘டிரா’

 டில்லி டெஸ்டின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் நிலைமை தலைகீழானது. இந்திய பவுலர்கள் ஏமாற்றியதால், எதிர்பார்த்த வெற்றிCricketers.jpg - 14.22 kB

கைநழுவியது. காற்றுமாசுபாடு போன்ற பிரச்னைகளை கடந்து இலங்கை அணி  போராடியதால், போட்டி ‘டிரா’ ஆனது. தொடரை 1–0 என வென்ற இந்திய அணி, வரிசையாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் இந்தியா 1–0 என முன்னிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி டில்லியில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 536/7 (‘டிக்ளேர்’), இலங்கை 373 ரன்கள் எடுத்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 246/5 ரன்களுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. 410 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 31 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. ஜடேஜா ‘சுழலில்’ மாத்யூஸ் (1) ஆட்டமிழந்தார். பின், இணைந்த தனஞ்செயா, கேப்டன் சண்டிமால் ஜோடி நிதானமாக விளையாடியது. 5வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்தநிலையில், சண்டிமால் (36) அவுட்டானார்.

தனஞ்செயா சதம்: பின் கைகோர்த்த தனஞ்செயா, ரோஷன் ஜோடி ‘நங்கூரம’ பாய்ச்சியது போல நின்று விளையாடினர்.  ‘சுழல்’, வேகம் என இரண்டையும் இந்த இளம் ஜோடி எளிதாக சமாளிக்க, இந்திய பவுலர்கள் சோர்வடைந்தனர். தனஞ்செயா டெஸ்ட் அரங்கில் 3வது சதம் கடந்தார். இவர் காயம் காரணமாக 119 ரன்களில் ‘ரிட்டையர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார்.

‘பீல்டிங்’ சொதப்பல்: பின் வந்த டிக்வெல்லாவும் ரோஷனுக்கு ஒத்துழைப்பு தந்தார். அறிமுக வீரர் என்ற பதட்டமே இல்லாமல் விளையாடிய ரோஷன் அரை சதம் கடந்தார். ஜடேஜாவின் 92வது ஓவரின் கடைசி பந்தில் டிக்வெல்லாவை ‘ஸ்டம்பிங்’  செய்யும் வாய்ப்பை சகா கோட்டைவிட்டார். இப்படி ‘பீல்டிங்கும்’ சொதப்ப, இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இலங்கை அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்திருந்தபோது, இரு அணியும் போட்டியை முடித்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தன. இதனையடுத்து, போட்டி ‘டிரா’ ஆனதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணி 1–0 என தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை இந்திய கேப்டன் கோஹ்லி வென்றார்.

610 ரன்கள்

இத்தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில், இந்திய அணி கேப்டன் கோஹ்லி, முதலிடம் பிடித்தார். இவர், 3 டெஸ்டில், 3 சதம், ஒரு அரைசதம் உட்பட 610 ரன்கள் குவித்தார். அடுத்த நான்கு இடங்களை முறையே இலங்கையின் சண்டிமால் (366 ரன்), இந்தியாவின் முரளி விஜய் (292), புஜாரா (289), ரோகித் சர்மா (217) கைப்பற்றினர்.

12 விக்கெட்

இத்தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்களுக்கான வரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் முதலிடம் பிடித்தார். இவர், 3 டெஸ்டில் 12 விக்கெட் கைப்பற்றினார். அடுத்த இரண்டு இடங்களை முறையே இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (10 விக்கெட்), முகமது ஷமி (9) கைப்பற்றினர். இலங்கை சார்பில் லக்மல், பெரேரா தலா 8 விக்கெட் வீழ்த்தினர்.

தொடரும் ஆதிக்கம்

நேற்று, இந்திய அணி 1–0 என தொடரை வென்று கோப்பை கைப்பற்றியது. இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் வரிசையாக 9 டெஸ்ட் தொடரை (ஆக.2015– டிச. 2017) வென்ற அணிகளின் பட்டியலில் இணைந்து சாதித்தது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா (2005-08), இங்கிலாந்து (1884–92) அணிகள் தொடர்ச்சியாக 9 தொடர்களில் வென்று இருந்தன.

இதுதான் அதிகம்

இந்திய மண்ணில் 4வது இன்னிங்சில் அதிக ரன் (299/5) சேர்த்த அணி என்ற பெருமை பெற்றது இலங்கை. இதற்கு முன், இதே டில்லி மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 276/5 ரன் (1987) சேர்த்ததே அதிகமாக இருந்தது.

ராசியான கோட்லா

கடந்த 1987ல் டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீசிடம் இந்திய அணி வீழ்ந்தது. இதன் பின், இங்கு நடந்த 12 டெஸ்டில் 10 போட்டியில் இந்தியா வாகை சூடியுள்ளது. இரண்டு போட்டி ‘டிராவில்’ முடிந்தது.

4வது வீரர்

அன்னிய மண்ணில் நான்காவது இன்னிங்சில் சதம் அடித்த 4வது இலங்கை வீரரானார் தனஞ்செயா. இதற்கு முன், குருசின்கா, ஜெயசூர்யா, சங்ககரா இந்த இலக்கை எட்டி இருந்தனர்.

பாண்டிங்குடன் இணைந்தார்

டெஸ்ட் அரங்கில் வரிசையாக 9 தொடரை வென்று காட்டிய கேப்டன் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்குடன் கோஹ்லி இணைந்தார்.

ஏமாற்றிய அஷ்வின்

‘சுழலுக்கு’ சாதகமான ஆடுகளத்தில் மட்டுமே அஷ்வினால் சாதிக்க முடியும் என்ற கருத்து நிலவுகிறது. இதற்கேற்ப, இவர் இப்போட்டியின் 2வது இன்னிங்சில் மொத்தம் 35 ஓவர் வீசி 126 ரன் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஆடுகளம் ‘பேட்டிங்கிற்கு’ ஒத்துழைத்ததால் இவரால் பிரகாசிக்க முடியவில்லை. எதிர் வரும் தென் ஆப்ரிக்கா தொடரில் இந்தியாவுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. இதனால், இந்திய அணி ‘லெவன்’ அணியை தேர்வு செய்வதில் சுதாரிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயம்.

ஜடேஜாவுக்கு பிறந்தநாள்

நேற்று இந்திய வீரர் ஜடேஜா 29வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக, போட்டி துவங்கும் முன் நடந்த பயிற்சியில் இவருக்கு கேப்டன் கோஹ்லி உள்ளிட்டோர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

‘நோ–பால்’ சர்ச்சை

நேற்றைய ஆட்டத்தில் ஜடேஜா வீசிய 44வது ஓவரின் 4வது பந்தில் கேப்டன் சண்டிமால் போல்டானார். ஆனால், ‘டிவி ரீப்ளேயில்’ பார்த்தபின், ‘நோ–பால்’ என அறிவிக்கப்பட்டது. ஜடேஜா கிரீசை தாண்டி காலின் ஐந்து விரல்களை வைத்திருந்தாலும், பாதம் கச்சிதமாக ‘கிரீசின்’ மீது பதிவது நன்றாக தெரிந்தது. இருப்பினும், அம்பயர் ஜோயல் வில்சன் (வெ.இண்டீஸ்) ‘நோ–பால்’ என அறிவித்தார். அப்போது 24 ரன்களில் தப்பிய சண்டிமால் பின், அஷ்வின் ‘சுழலில்’ 36 ரன்களில் அவுட்டானார்.

வெளியேறிய தனஞ்செயா

நேற்றைய ஆட்டத்தில் இந்திய பவுலர்களுக்கு தனஞ்செயா சதம் கடந்து நெருக்கடி தந்தார். ஆனால், தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக 119 ரன்களில் வெளியேறினார்.