Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது கிரிக்கெட் வினய் குமார் ‘ஹாட்ரிக்’

கிரிக்கெட்

வினய் குமார் ‘ஹாட்ரிக்’

ரஞ்சி கோப்பை காலிறுதியில் கர்நாடக அணி கேப்டன் வினய் குமார், ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க, முதல் இன்னிங்சில் மும்பை அணி 173 ரன்னுக்கு சுருண்டது.Vinay.jpg - 4.35 kB

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று, நாக்பூரில் துவங்கிய காலிறுதியில், 41 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, கர்நாடகாவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற கர்நாடகா அணி கேப்டன் வினய் குமார், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

வினய் அபாரம்:

மும்பை அணிக்கு வினய் குமார் தொல்லை தந்தார். இவர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் பிரித்வி ஷா (2) அவுட்டானார். பின், 3வது ஓவரை வீசிய வினய், முதலிரண்டு பந்தில் ஜே பிஸ்தா (1), ஆகாஷ் பார்கர் (0) ஆகியோரை அவுட்டாக்கி, ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். அடுத்து வந்த சித்தேஷ் லத் (8), சூர்ய குமார் யாதவ் (14), கேப்டன் ஆதித்யா தாரே (4), ஷிவம் துபே (7) சொற்ப ரன்னில் ‘பெவிலியன்’ திரும்பினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த அகில் ஹெர்வாத்கர் (32) ஆறுதல் தந்தார். வினய் ‘வேகத்தில்’ கார்ஷ் கோத்தாரி (1) நிலைக்கவில்லை. கடைசி நேரத்தில் பொறுப்பாக ஆடிய தவால் குல்கர்னி, அரைசதம் கடந்தார். இவர், 75 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்ரீநாத் அரவிந்த் பந்தில் அவுட்டானார். முதல் இன்னிங்சில் மும்பை அணி 173 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஷிவம் மல்கோத்ரா (7) அவுட்டாகாமல் இருந்தார். கர்நாடகா சார்பில் வினய் குமார் 6 விக்கெட் கைப்பற்றினார்.

அகர்வால் அரைசதம்:

பின் முதல் இன்னிங்சை துவக்கிய கர்நாடகா அணிக்கு ரவிகுமார் சமர்த், மயாங்க் அகர்வால் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பொறுப்பாக ஆடிய அகர்வால் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த போது சமர்த் (40) அவுட்டானார். முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் கர்நாடக அணி ஒரு விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. அகர்வால் (62), அபாஸ் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

கர்நாடகாவின் வினய் குமார், ரஞ்சி கோப்பை ‘நாக்–அவுட்’ போட்டியில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் கைப்பற்றிய 6வது பவுலர் என்ற பெருமை பெற்றார். ஏற்கனவே, ஹோல்கர் அணியின் சாந்து சர்வாட் (எதிர்: பீகார், 1948–49, காலிறுதி), தமிழகத்தின் கல்யாணசுந்தரம் (எதிர்: மும்பை, 1972–73, பைனல்), கர்நாடகாவின் ரகுராம் பாட் (எதிர்: மும்பை, 1981–82, அரையிறுதி), பெங்கால் அணியின் எஸ்.பி. முகர்ஜி (எதிர்: ஐதரபாத், 1989–90, அரையிறுதி), சென்சர்மா (எதிர்: டில்லி, 1993–94, காலிறுதிக்கு முந்தைய சுற்று) ஆகியோர் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்திருந்தனர்.

ரஞ்சி கோப்பையில் 2வது முறையாக ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தினார் வினய் குமார். இதற்கு முன், 2007–08 ல் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக இச்சாதனை படைத்திருந்தார். இதன்மூலம், ரஞ்சி கோப்பையில், 2 முறை அல்லது அதற்கு மேல் இம்மைல்கல்லை எட்டிய 2வது கர்நாடகா பவுலரானார். ஏற்கனவே அனில் கும்ளே (1991–92ல் எதிர்: ஆந்திரா மற்றும் 1997–98 ல் எதிர்: ஒடிசா) 2 முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

* தவிர, ரஞ்சி கோப்பையில் 2 முறை அல்லது அதற்கு மேல் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய 4வது பவுலரானார். ஏற்கனவே சர்வீசஸ் அணியின் ஜோகிந்தர் ராவ் (3 முறை), விதர்பா அணியின் பிரிதம் காந்தே (2 முறை), கர்நாடகாவின் அனில் கும்ளே (2 முறை) இச்சாதனை படைத்திருந்தனர்.

இது, ரஞ்சி கோப்பையில் கர்நாடகா அணி சார்பில் பதிவான 10வது ‘ஹாட்ரிக்’. இதன்மூலம் அதிகமுறை ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த அணிகளுக்கான பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதனை அடுத்து பெங்கால் (6 முறை), டில்லி (5), ஹரியானா (5), தமிழகம் (5) அணிகள் இம்மைல்கல்லை எட்டியிருந்தன.

பிரசன்னாவை முந்தினார்

நேற்று, மும்பையின் பிரித்வி ஷா விக்கெட்டை கைப்பற்றியதன்மூலம், ரஞ்சி கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய கர்நாடகா பவுலர்கள் வரிசையில், எரப்பள்ளி பிரசன்னாவை (370 விக்.,) முந்தி 3வது இடம் பிடித்தார் வினய் குமார் (375 விக்.,). முதலிரண்டு இடங்களில் சுனில் ஜோஷி (479 விக்.,), சந்திரசேகர் (437) உள்ளனர்.