Wed01172018

Last updateWed, 17 Jan 2018 4am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது கிரிக்கெட் நம்பிக்கை இழக்க மாட்டோம்: பும்ரா உறுதி

கிரிக்கெட்

நம்பிக்கை இழக்க மாட்டோம்: பும்ரா உறுதி

‘‘ ஒரு போட்டியில் அடைந்த தோல்வியால், அணியினர் நம்பிக்கை இழந்து விடக் கூடாது. அப்படி நடந்தால், பிறகு விளையாடுவதற்கே தகுதி இல்லை,’’ என, வேகப்பந்து வீச்சாளார் பும்ரா தெரிவித்தார்.

 

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கேப்டவுன் நடந்த முதல் டெஸ்டில் தோற்ற இந்திய அணி, 0–1 என, தொடரில் பின் தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், நாளை செஞ்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் துவங்குகிறது. 

இப்போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற கட்டாயத்தில் உள்ள இந்திய அணி வீரர்கள், நேற்று நான்கு மணி நேரம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து இந்தியாவின் பும்ரா கூறியது: 

பொதுவாக புதிய மண்ணில் விளையாட செல்வது என்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஏனெனில் ஆடுகளம், சூழ்நிலைகள் வித்தியாசமாக இருக்கும். இதனால், எப்படியும் புதிய சவால்களை சந்தித்து தான் ஆக வேண்டும். இங்கு அடுத்தடுத்து விளையாடும் போது தான், ஆடுகளம் குறித்து நன்கு தெரிய வரும். எந்த இடத்தில் பந்தை ‘பிட்ச்’ செய்வது, எவ்வளவு வேகத்தில் வீசுவது என, கற்றுக் கொள்ளலாம். 

பாடம் கற்றோம்: கேப்டவுனில் நடந்த டெஸ்ட், முதல் இன்னிங்சில் நாங்கள் செய்த தவறுகளை உணர்ந்து கொண்டோம். இதனால் தான் தென் ஆப்ரிக்க அணி மீண்டது. இதனால், இரண்டாவது இன்னிங்சில் இரு பக்கங்களில் இருந்தும், பவுலிங்கில் நெருக்கடி கொடுத்தோம். எங்களால் முடிந்த வரை சிறப்பாக செயல்பட முயற்சி செய்தோம். 

இருப்பினும், பலன் கிடைக்கவில்லை. இந்த ஒரு போட்டியின் முடிவினால், நம்பிக்கை இழந்து விடக் கூடாது. ஒருவேளை அப்படி நடந்தால், பிறகு விளையாடுவதற்கே தகுதி இல்லாமல் போய் விடும். செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஏனெனில், இதுவரை தவறு செய்யாத கிரிக்கெட் வீரர் என்று எந்த ஒருவரும் இல்லை. 

முதல் அனுபவம்: என்னைப் பொறுத்தவரையில் இதற்கு முன் தென் ஆப்ரிக்க மண்ணில் விளையாடியது இல்லை. முதல் டெஸ்டில் நல்ல அனுபவம் கொடுத்துள்ளது. இதை வைத்து, இரண்டாவது டெஸ்டில் கவனம் செலுத்த உள்ளேன். மற்றபடி, பெரியளவில் ஒன்றும் இல்லை. பவுலர் என்ற முறையில், டிவிலியர்சை அவுட் செய்து, விரைவில் முதல் விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி. 

பவுலிங் பயிற்சியாளராக உள்ள பரத் அருணுக்கு, 19 வயது கிரிக்கெட்டில் இருந்து என்னை நன்கு தெரியும். தேசிய கிரிக்கெட் அகாடமியிலும் பயிற்சியாளராக இருந்தார். எனது பலம், பலவீனம் அனைத்தும் இவருக்குத் தெரியும். இவரது ஆலோசனை பெரிதும் கைகொடுத்தது.