Wed01172018

Last updateWed, 17 Jan 2018 4am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது கிரிக்கெட் இந்திய அணிக்கு ராணுவ மரியாதை

கிரிக்கெட்

இந்திய அணிக்கு ராணுவ மரியாதை

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கும் முன், தென் ஆப்ரிக்க ராணுவம் சார்பில், 21 குண்டுகள் முழங்க, மரியாதை செய்யப்பட உள்ளது. 

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், நாளை செஞ்சுரியனில் துவங்கவுள்ளது. இப்போட்டிக்கு  முன், தென் ஆப்ரிக்க ராணுவம் சார்பில், இரு அணி வீரர்களுக்கு மரியாதை செலுத்த உள்ளனர். வழக்கமாக தென் ஆப்ரிக்காவில் ரக்பி, கால்பந்து போட்டிகளுக்குத் தான் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இருப்பினும், முதன் முறையாக கிரிக்கெட் போட்டிக்கு இதுபோல வழங்க உள்ளனர். 

இதன் படி, போட்டி துவங்குவதற்கு முன், தரை மற்றும் கப்பல் படையை சேர்ந்த 50 வீரர்கள், பாண்டு வாத்திய இசையுடன், பவுண்டரி எல்லையை சுற்றி அணி வகுத்து நிற்பர். இதன் பின், விமானத்தில் இருந்து பாராசூட் வீரர்கள் களத்தில் குதிக்கின்றனர். 

அடுத்து இரு அணிகளின் தேசிய கீதம் பாடப்படுகிறது. இதையடுத்து, ‘ஜி–5’ ரக துப்பாக்களில் இருந்து, 21 முறை குண்டுகள் முழங்கப்பட உள்ளது. கடைசியில் மீண்டும் பாண்டு வாத்தியம் இசை ஒலிக்க, ராணுவ வீரர்கள் மைதானத்தை விட்டு கிளம்புவர்.  

இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி, கடந்த சில நாட்களாக நடந்தது. இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியது: 

தென் ஆப்ரிக்காவில் ரக்பி அணிக்கு மட்டும் தான், இதுபோல ராணுவ மரியாதை தரப்படும். தற்போது, ‘ஜென்டில்மேன்’ விளையாட்டு எனப்படும் கிரிக்கெட்டுக்கும் தரவுள்ளோம். தவிர, இதற்கு முன் எந்த கிரிக்கெட் அணிகளுக்கும் இதுபோன்ற மரியாதை கொடுக்கப்பட்டது இல்லை என்று தான் நினைக்கிறேன். இந்த விளையாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது நல்ல விஷயம் தான்.