Fri09222017

Last updateFri, 22 Sep 2017 6am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது மற்றயவை இந்தோனேஷிய பாட்மின்டனில் ஸ்ரீகாந்த் சாம்பியன்

இந்தோனேஷிய பாட்மின்டனில் ஸ்ரீகாந்த் சாம்பியன்

இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில், ஜப்பானின் சகாய் கசூமசாவை வீழ்த்தினார்.        Srikanth.jpg - 5.61 kB

         

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–22’ இந்தியாவின் ஸ்ரீகாந்த், 47வது இடத்தில் உள்ள ஜப்பானின் சகாய் கசூமசா மோதினர்.                             

அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை வீழ்த்தியிருந்ததால், ஸ்ரீகாந்த் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கேற்ப முதல் செட்டை 21–11 எனக் கைப்பற்றிய ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டில் 6–11 என பின்தங்கி இருந்தார். பின் எழுச்சி கண்ட இவர், 21–19 என வென்றார்.                 

மொத்தம் 37 நிமிடம் நீடித்த போட்டியில், அசத்தலாக ஆடிய ஸ்ரீகாந்த் 21–11, 21–19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் இத்தொடரில் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் மற்றும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் செய்னா நேவல், மூன்று முறை (2009, 2010, 2012) பட்டம் வென்றிருந்தார்.                 

மூன்றாவது பட்டம்: இது, சூப்பர் சீரிஸ் அந்தஸ்து பெற்ற தொடரில் ஸ்ரீகாந்த் வென்ற 3வது பட்டம். இதற்கு முன், சீன ஓபன் (சூப்பர் சீரிஸ் பிரிமியர், 2014), இந்திய ஓபன் (சூப்பர் சீரிஸ், 2015) தொடர்களில் பட்டம் வென்றிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சிங்கப்பூர் ஓபனில் (சூப்பர் சீரிஸ்) பைனல் வரை முன்னேறினார்.           

 

மகிழ்ச்சி: இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், ‘‘இந்தோனேஷிய ஓபனில் பட்டம் வென்றது மகிழ்ச்சி. பைனலின் இரண்டாவது செட்டில், ஜப்பான் வீரர் கசூமசா, சிறப்பாக விளையாடினார். ஒருகட்டத்தில் 6–11 என பின்தங்கி இருந்த நான், 13–13 என எழுச்சி கண்டது திருப்பமாக அமைந்தது. எனது பயிற்சியாளர் மற்றும் போட்டியின் போது ஊக்கப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார்.               

பிரதமர் பாராட்டு     

பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,‘‘இந்தோனேஷிய ஓபனில் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த ஸ்ரீகாந்த்தை வாழ்த்துகிறேன்,’’ என தெரிவித்திருந்தார்.     

ரூ. 5 லட்சம் பரிசு     

இந்திய பாட்மின்டன் சங்கம் (பி.ஏ.ஐ.,) சார்பில், ஸ்ரீகாந்த்திற்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.ஏ.ஐ., தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், ‘‘இந்தோனேஷிய ஓபனில் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த்திற்கு வாழ்த்துக்கள். இவருக்கு, ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்,’’ என்றார்